முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு நடந்த சில நிகழ்வுகள் குறித்து நேரம் வரும்போது சொல்ல இருப்பதாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் தெரிவித்திருக்கிறார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் 221 காத்து நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் சர்வ கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் பேட்டி :தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிகழ்வு ஒரு தவறான நடவடிக்கை. அது யார் உத்தரவிட்டு யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியைச் சுமத்தி இருக்கிறார்கள்.யார் செய்தார்கள் என்று இப்போது வரை என்னிடம் தகவல் இல்லை. நான் சுத்தமானவன்.யார் யாரோ என்னவெல்லாம் பேசிக் கொள்கிறார் கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்லப் போவதில்லை. பதில் கொடுக்க வேண்டிய அவசியத்திற்கும் நான் இல்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு ஏதோ சதி நடந்திருக்கிறது. என்ன நடந்தது யார் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் யாரையும் பழி சுமத்த விரும்பவில்லை. ஆனால் அதில் நிச்சயம் சதி நடந்திருக்கிறது. அது என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது நான் சொல்வேன் என்றார்.ஜெயலலிதா இறந்த பிறகு ராம் மோகன் ராவ் இப்போதுதான் மெல்ல வாய் திறந்திருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது.