தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கற்குவேல், ஐந்தாண்டுகளுக்கு முன் இவர் போலீஸ் இளைஞர் காவல் படையில் பணியாற்றி வந்தார். 2017ல் இளைஞர் காவல் படையிலிருந்து காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரில் இவரும் ஒருவர். மணிமுத்தாறு படாலியனில் பயிற்சி முடித்த கையோடு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் நிலையத்தில் ஏட்டாக பணியில் சேர்ந்தார். ஏட்டு கற்குவேல் பெரும்பாலும் இவர் இரவு பணியில்தான் இருந்துள்ளார். அதையே இவர் விரும்பியதாகவும் தெரிகிறது.
பகலில் ஓய்வு நேரத்தில் கற்குவேல் தனது கூட்டாளிகளுடன் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார் . கொள்ளை நடக்கும் இடங்களில் பதிவான கைரேகைகள் மூலம் பிடிபடலாம் என்பதால் வேலைக்குச் சேரும் போது காவல்துறை பதிவேட்டில் பதிவு செய்த கைரேகைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த நிலையில்தான் நெல்லை பெருமாள் புரம் பகுதியில் ஒரு வீட்டில் பட்டப் பகலில் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் நடந்தது. அது குறித்த விசாரணையில் அங்குக் கிடைத்த கைரேகைகளில் ஒன்று கற்குவேலின் கைரேகை யாக இருந்தது. இதையடுத்து கற்குவேல் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவரை ஆயுதப்படை உயர் அதிகாரிகள் கண்காணிக்கத் தொடங்கினார் அவரது செல்போன் பதிவுகளையும் அழைப்புகளையும் ரகசியமாகக் கண்காணித்ததில் கற்குவேல் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும் பல குற்றவாளிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இவர் ஆன்லைனில் அன்பே விளையாடி பெரும் தொகையை இழந்து இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து கற்குவேல் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 15 பவுன் நகை ஒரு கார் , ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை தூத்துக்குடி மாவட்ட புறநகர்ப் பகுதிகளிலும் நடந்த கொள்ளைச் சம்பவங்களும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. தற்போது கற்குவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.