கிருஷ்ணகிரி பொங்கல் பரிசு வழங்கியதில் ரூ.1.5 கோடி முறைகேடு : உயர் அதிகாரி விசாரணை

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 1.50 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.இது தொடர்பாக ஓசூரைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் உயர் அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் புகார் மனு மீது விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் லட்சுமி , கிருஷ்ணகிரியில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். 5 மணி நேரம் பல்வேறு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. முறைகேடு குறித்து புகார் அளித்த ஜெயகிருஷ்ணன் இடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து ஜெயகிருஷ்ணன் கூறியதாவது: 2019-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காகக் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 1.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகை 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்குப் பிரித்து வழங்கி, அதன் மூலம் பயனாளிகளுக்குப் பொங்கல் பரிசுத் தொகை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் , அரசு உத்தரவுப்படி பணத்தைச் சங்கங்களுக்கு வழங்காமல், தன்னிச்சையாகத் தரமில்லாத பொருட்களைக் கொள்முதல் செய்துள்ளனர். இதில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அரசு அதற்கு உத்தரவிடவேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement

READ MORE ABOUT :

/body>