சிறிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவரும் விதமாக பாரதிய ஜனதா மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகளை கட்டுக்குள் நிறுத்த அதிமுக விரும்புகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்க இருக்கும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. சென்னையில் செவ்வாயன்று தனியார் ஹோட்டல் ஒன்றில் அதிமுக மற்றும் பாஜ கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் அதிமுக சார்பிலும் பாஜ சார்பில் அதன் மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் நான்கு பேரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
ஆளும் அதிமுக 170 முதல் 180 தொகுதிகளில் நிற்பதை விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு முடிவடைந்த நிலையில் 23 தொகுதிகள் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றும் சில சிறிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் எண்ணத்தில் பாமக மட்டுமே அதிக அளவில் தொகுதிகளைப் பெற்ற கட்சியாக இருக்கவேண்டும் என்று அதிமுக தலைமை நினைப்பதாக தெரிகிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதாவுக்கு அதிகபட்சமாக 20 மற்றும் தேமுதிகவுக்கு 15 என்ற எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கலாம் என்ற எண்ணவோட்டத்தில் ஆளும் தரப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று (புதன்கிழமை) கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பேரத்தை முடித்துவிடவேண்டும் என்பதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுமே மும்முரம் காட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.