கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கடைவீதி பகுதியில் தனியாக வசித்து வந்தவர் முத்துலட்சுமி. 70 வயதான இவருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். தனியாக வசித்து வந்த முத்துலட்சுமி அருகில் குடியிருக்கும் இளைஞர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தும் மாங்காய் விற்றும் வந்தார்.
இந்நிலையில் சம்பவதன்று இரவு தனது இளைய மகனுக்கு போன் செய்து பேசியுள்ளார். பின்னர் அவரது மகள் போன் செய்தபோது வேறு நபர் ஒருவர் போனை எடுத்துள்ளார். யார் என்று கேட்ட போது போனை துண்டித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கேட் பூட்டப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து அவரது மூத்த சகோதரருக்கு தகவல் தெரிவித்து அருகில் உள்ளவர்கள் மூலம் சுவற்றை தாண்டி உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கட்டிலில் மர்மமான முறையில் மூதாட்டி முத்துலட்சுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி மற்றும் செல்போன் ஆகியவை திருடப்பட்டிருந்திருக்கிறது. இதையடுத்து தடாகம் காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறையினரை வரவழைத்து அங்கு பதிந்துள்ள கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அருகில் குடியிருப்பவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, காணமல் போன செல்போன் எண்ணைக் கொண்டு குற்றவாளியை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. செல்போன் மற்றும் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கருமத்தம்பட்டியில் பதுங்கி இருந்த கொலை குற்றவாளி வினோத் என்கிற கருப்பையா என்ற கூலி தொழிலாளியை கைது செய்தனர். இவர் புதுக்கோட்டை மாவட்டம் செவகம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் என்பதும், தற்போது பன்னிமடையில் மனைவியுடன் தங்கி கூலி வேலை செய்து வருவது தெரிந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சம்பவதன்று மூதாட்டி முத்துலட்சுமியை கழுத்தை நெரித்து கொலைசெய்து கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் மற்றும் செல்போனை திருடியதும். பின்னர் மூதாட்டி சடலத்துடன் உறவு வைத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வினோத்தை போலீசார் சிறையில் அடைத்தனர்.