தஞ்சை வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு..

Thiruvalluvar statue defamed near vallam in thanjavur

by எஸ். எம். கணபதி, Nov 4, 2019, 10:34 AM IST

திருவள்ளுவர் இந்துவா, சனாதன கோட்பாட்டை போதித்தவரா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கையில், வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

தாய்லாந்து நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டார். மேலும் அவர் பேசுகையில், தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற குறளை குறிப்பிட்டார்.
இதை தமிழக பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டிருந்தனர். அதில் திருவள்ளுவர் காவி உடையணிந்து திருநீறு பூசியிருந்தார்.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம். எத்தனை வர்ணம் பூசினாலும் உங்கள் வர்ண சாயம் வெளுத்து விடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், சனாதன இந்து தர்மத்தில் சதுர்விதபுருஷார்த்தம் அதாவது நான்கு விதமான மானுட குறிக்கோள் தர்மார்த்த காம மோக்ஷம் என்கிறது. அதன் அடிப்படையிலேயே அறம், பொருள், இன்பம் என்று வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார். ஆகவே வள்ளுவமானது வடிவமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் என்று பதிலளித்திருக்கிறார்.

இதற்கு திமுகவினர் பலரும் ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்படி மாறி, மாறி திருவள்ளுவர் இந்துவா, சனாதன கோட்பாட்டை ஏற்று கொண்டவரா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது யாரோ மர்ம ஆசாமிகள் சாணத்தை வீசியிருக்கிறார்கள். இதை தமிழ் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிலையை அவமதிப்பு செய்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த திருவள்ளுவர் சிலையின் கல்வெட்டில், இன்னா செய்தாரை ஒருத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறள் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தஞ்சை வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Thanjavur News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை