திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜக போட்ட ட்விட்டர் பதிவால், பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளளது. இதில், திருவள்ளுவர் இந்துவா, சனாதன கோட்பாட்டை போதித்தவரா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.
தாய்லாந்து நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டார். மேலும் அவர் பேசுகையில், தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற குறளை குறிப்பிட்டார்.
இதை தமிழக பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டிருந்தனர். அதில் திருவள்ளுவர் காவி உடையணிந்து திருநீறு பூசியிருந்தார்.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம். எத்தனை வர்ணம் பூசினாலும் உங்கள் வர்ண சாயம் வெளுத்து விடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், சனாதன இந்து தர்மத்தில் சதுர்விதபுருஷார்த்தம் அதாவது நான்கு விதமான மானுட குறிக்கோள் தர்மார்த்த காம மோக்ஷம் என்கிறது. அதன் அடிப்படையிலேயே அறம், பொருள், இன்பம் என்று வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார். ஆகவே வள்ளுவமானது
வடிவமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் என்று பதிலளித்திருக்கிறார்.
அதே போல், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், திருந்த பாருங்கள் ஸ்டாலின் அவர்களே! பாஜகவினரை திருக்குறள் படித்து திருந்த சொல்லும் ஸ்டாலின் அவர்களே, இதோ இந்த குறள் உங்களுக்காகத்தான்.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (அதிகாரம்: அழுக்காறாமை, குறள் 167)
விளக்கம் : மனம் சுருங்கிப் பொறாமைப்படுபவனை ஸ்ரீதேவி, மூதேவியிடம் ஒப்படைப்பாள்.
கருணாநிதி அவர்களும், ஜெயலலிதா அவர்களும் இல்லாத நிலையில் கூட ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்ற பொறாமையில் தரம் தாழ்ந்து பேசும் ஸ்டாலின் அவர்களே, வர்ணம் பேசுவதை விடுத்து, திருக்குறள் படித்து சனாதன தர்மம் அறிந்து திருந்த பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு திமுகவினர் பலரும் ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்படி மாறி, மாறி திருவள்ளுவர் இந்துவா, சனாதன கோட்பாட்டை ஏற்று கொண்டவரா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.