தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூரில் நடக்கும் தசரா திருவிழாவைப் போலச் சிறப்பு வாய்ந்தது இங்கு நடக்கும் திருவிழா.கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் குடியேற்ற நிகழ்ச்சிக்குப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆன்லைனில் புக் செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி.
28 ஆம் தேதி வரை நடைபெறும் கொடியேற்றம்,சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகளில் பக்தர்கள்,பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை, இந்த நிகழ்ச்சிகள் யூடியுப் சேனல்களிலும்,உள்ளுர் டிவிகளிலும் நேரடியாக ஔி பரப்பப்படும். தசரா திருவிழாவின் 2 ஆம் நாள் முதல்(அக்.18) 9 ஆம் நாள் வரை(அக்.25) பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.அதற்காக இணையவழியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பக்தர்கள் வேடம் அணிந்து கோயில் பகுதிக்கு வர அனுமதியில்லை.
பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பக்தர்கள் அனைவரும் கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரத்துறை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தி அனுமதிக்கப்படுவார்கள்.
திருவிழா நாட்களில் சிறப்பு அன்னதானத்திற்கு அனுமதியில்லை.தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை. விழா நாட்களில் கடற்கரையில் தங்குவது, கடைகள் அமைப்பது, போன்றவற்றிற்கு அனுமதியில்லை. கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதியில்லை என்பது உட்படக் கோயில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது .