மினசோட்டா: அமெரிக்காவில், டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் சார்பில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி மையத்தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார்.
அமெரிக்காவில், கடந்த 2013ம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்களுக்காகவே தொடங்கப்பட்ட அமைப்புதான் டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன். தன்னார்வமுள்ள, லாப நோக்கமற்ற அமைப்பான டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் தமிழையும், தமிழினத்தையும் ஒன்றிணைக்க அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டிலும் தமிழ் மொழியை பேசி, படித்துப் பழக குழந்தைகளுக்கான பாடசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தை முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அப்போது தொடங்கி வைத்தார்.
மினசோட்டாவில் புதியதாக குடிபெயரும் தமிழ்க் குடும்பங்களுக்கு அனைத்து வித வழிகாட்டுதலும், தமிழ் சமூகத்தோடு வழக்குத்தமிழை, தமிழ்நாட்டு பாரம்பரிய, கலாச்சாரத்தை பறைசாற்றுவது எங்கள் தலையாய முயற்சி என்ற கொள்கை அடிப்படையில் செயல்பட்டு வரும் டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
அந்த வகையில், டுவின் சிட்டீஸ் தமிழ் சங்கம் சார்பில் மினசோட்டாவில் வரும் 25ம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்துக் கொள்கிறார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக முன்னாள் உறுப்பினரான சிவசேனாதிபதி தமிழ் மொழிக்கும், தமிழ் பாரம்பரியம், கலாச்சாரங்களை பேணி காப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், ஜல்லிக்கட்டுக்கு பீட்டா எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சிவசேனாதிபதி பலருடன் இணைந்து கடந்த 2013ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆரம்பித்தார். இதன் பிறகு, கடந்த 2017ம் ஆண்டில் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் பெரிய அளவில் நடைபெற்றது. இந்த போராட்டம், உலக வரலாற்றிலேயே முக்கிய நிகழ்வாக இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இவர், தமிழர் கலாச்சாரத்தையும், மாடுகளின் முக்கியத்துவத்தையும் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், நிகழ்ச்சிகளிளும் கலந்துக் கொண்டு தமிழர்களை சந்தித்து வருகிறார்.
அதன்படி, அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வரும் சிவசேனாதிபதி தமிழர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். இதற்காக, ஒரு மாதம் அமெரிக்காவில் தங்கி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மினசோட்டாவில் தமிழினத்தை ஒன்று சேர்க்கும் டுவின்சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியம், தமிழ்நாடு கால்நடை உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் சிவசேனாதிபதி உரையாற்றுகிறார். மினடோங்கா கம்யூனிட்டி சென்டரில் மாலை 3 மணி முதல் 5 மணி (சிஎஸ்டி) வரையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்றும் டுவின் சிட்டீஸ் தமிழ் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பார்வையாளர்கள் கேட்டுக்கும் கேள்விகளுக்கும் சிவசேனாதிபதி பதிலளிக்க உள்ளார். இதனால், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சுவாரசியமாகவும், பயனுடையதாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மினசோட்டாவில் தமிழையும், தமிழினத்தையும், தமிழ் கலை, கலாச்சாரத்தையும் நட்புறவோடு ஒன்றிணைத்து வழி நடத்திச் செல்ல டுவின் சிட்டீஸ் தமிழ் சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. தமிழுக்காக உருவாகிய டுவின்சிட்டீஸ் தமிழ் சங்கத்திற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.