பன்னாட்டு விளம்பர கூட்டமைப்பின் (IAA) தலைவரான முதல் இந்தியர்

பன்னாட்டு விளம்பர கூட்டமைப்பு (International Advertising Association - IAA) 80 ஆண்டு கால பாரம்பரியம் மிக்கது. இதன் தலைவர் பதவி, உலக அளவில் சந்தைப்படுத்தல், தொடர்பு போன்ற துறைகளில் தாக்கத்தை அளிக்கக்கூடியது.

இதுவரை இதன் தலைவராக இந்தியர் எவரும் பொறுப்பேற்றதில்லை.
இந்திய விளம்பர துறையின் மூத்த ஆளுமையும் ஆர்.கே.ஸ்வாமி ஹன்ஸா குழுமத்தின் தலைவருமான ஸ்ரீனிவாசன் ஸ்வாமி பன்னாட்டு விளம்பர கூட்டமைப்பான ஐஏஏவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ரோமானியாவில் தலைநகர் புக்காரெஸ்ட்டில் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

"இப்பொறுப்பு என் தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கியமான மைல்கல் மட்டுமல்ல, உலக விளம்பர மற்றும் ஊடக துறையில் இந்தியா தலைமை பொறுப்பேற்கும் வகையில் முன்னேறி வந்துள்ளதை குறிக்கும் அடையாளமுமாகும்," என்று ஸ்ரீனிவாசன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஐக்கிய அமீரகம், ஆஸ்திரேலியா, மலேசியா, ரஷ்யா, நெதர்லாந்து, ஈரான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 25 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழுவை ஸ்வாமி வழிநடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement