அமெரிக்க கிரீன் கார்டு: இந்தியர்களை பாதிக்கும் புதிய விதி நடைமுறைக்கு வருமா?

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்வோரும், அமெரிக்காவில் வசிக்கும் உரிமையில் அந்தஸ்து மாற்றம் அல்லது விசாவில் மாற்றம் கோருவோரும் அரசு நல உதவிகள் எதையும் கோர மாட்டோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற புதிய விதி முன்மொழியப்பட்டுள்ளது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை செயல் கிறிஸ்ட்ஜென் நெய்ல்சன் கையெழுத்திட்ட இப்புதிய விதி பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 21ம் தேதி அத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் மாகாண நீதிமன்றம் ஒன்றில் ஹெச்-4 விசா பெற்றுள்ளவர்களுக்கான பணிபுரியும் உரிமையை ரத்து செய்ய இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தினால் பயன்பெற்று வருபவர்களுள் பெரும்பாலானோர் இந்திய பெண்மணிகளாவர். இந்நிலையில் சட்டப்பூர்வமாக குடிபெயர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இன்னொரு விதி முன்மொழியப்பட்டுள்ளது.

"அமெரிக்காவுக்கு குடிபெயர்வோர் பொருளாதாரத்தில் சுயசார்புள்ளவர்களாக இருக்க வேண்டும். சட்டத்தை உருவாக்குவதில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளிப்படையாகவே உள்ளது. முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தை குறித்து பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கிறோம். இது நாடாளுமன்றத்தால் சட்டமாக்கப்படும்போது, குடிபெயர்வோரின் சுயசார்பு உறுதிப்படுத்தப்படும். வரிசெலுத்தும் அமெரிக்கர்களுக்கு புதிதாக குடிபெயர்வோர் சுமையாக மாற மாட்டார்கள்," என்று கிறிஸ்ட்ஜென் நெய்ல்சன் கூறியுள்ளார்.

இந்தப் புதிய விதிக்கு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், டிராப்பாக்ஸ், யாஹூ மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எஃப்டபுள்யூடி.யூஎஸ் (FWD.US) நிறுவனம், "சட்டப்பூர்வமான குடிபெயர்தலை புறவாசல் வழியாக தடுக்கும் முயற்சி இது. இந்த விதி நடைமுறைக்கு வந்தால், ஒட்டுமொத்த நாட்டையே பாதிக்கும்," என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

"இந்தக் கொள்கை முடிவானது, கடுமையாக உழைக்கும் வெளிநாட்டு பணியாளர்களின் பங்களிப்பை தடுப்பதால், காலப்போக்கில் அமெரிக்காவை பாதிக்கும்," என்று எஃப்டபுள்யூடி.யூஎஸ் (FWD.US) நிறுவனத்தின் தலைவர் டாட் ஸ்கெல்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறையின் ஏப்ரல் மாத கணக்குப்படி, 3,06,400 இந்தியர்கள் கிரீன்கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். குழந்தைகள் மற்றும் வாழ்க்கைதுணைகளின் எண்ணிக்கை 3,25,819 ஆக மொத்தம் 6,32,219 இந்தியர்கள் தற்போது அமெரிக்காவில் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்கு குடிபெயர்வோரை, சட்டத்திற்கு விரோதமாக குடிபெயர்வோர்களைப் போன்று அமெரிக்க அரசின் நலதிட்டங்களை பெற இயலாத நிலைக்கு தள்ளப்போகும் இந்தப் புதிய விதியை குறித்து பொதுமக்கள் கருத்துகளை பதிவு செய்ய 60 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement