மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பேரணியில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு எழுந்தது. ராகுலும் உடன் சென்ற தலைவர்களும் பாதிப்பின்றி தப்பினர்.
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பரப்புரையில் இறங்கியுள்ளன. சனிக்கிழமை ஜபல்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு திறந்த ஜீப்பில் பயணித்தார். அவருடன் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில் திடீரென தீப்பற்றியது. அனைவரும் அதிர்ந்த நிலையில் உடனடியாக தீ அணைந்தது. இருந்தபோதும் பேரணியில் கலந்து கொண்ட தலைவர்கள், தொண்டர்கள் அனைவர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தியை ஆரத்தி எடுத்து வரவேற்பதற்காக கொண்டு வரப்பட்ட தீபங்களில் இருந்த நெருப்பானது அருகில் தொண்டர்கள் வைத்திருந்த கேஸ் நிரப்பிய பலூன்களில் பற்றியதால் தீப்பிழம்பு உண்டானது தெரிய வந்தது.
"அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள்தாம். தேவையான 15 அடி பாதுகாப்பான இடைவெளி அங்கு இருந்தது. தொண்டர்கள் பலூன்களை கொண்டு வரவோ, ஆரத்தி எடுக்கவோ தடைவிதிக்கவேண்டும் என்ற விதி பாதுகாப்புக்கான வழிமுறைகளில் இல்லை. அங்கு தடியடி நடத்தப்படவில்லை," என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் சிங் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகாவில் நடந்த பேரணிக்கு ராகுல் காந்தி வந்த விமானம் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதைக் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ராகுல் காந்திக்கு அளிக்கப்படும் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக குஜராத்தில் நடந்த கல்வீச்சு சம்பவத்தை குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் விவகாரம் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த இரு ஆண்டுகளில் ராகுல் காந்தி திட்டமிட்ட மற்றும் திட்டமிடாத 121 சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றில் குறைந்தது 100 பயணங்களில் அவர் குண்டு துளைக்காத வாகனத்தை பயன்படுத்தவில்லை. 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் ராகுல் காந்தி 6 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
அவரது சிறப்பு பாதுகாவல் படையினரை உடன் அழைத்துச் செல்லாததோடு, அவர்களுக்கு கடைசி நேரத்தில் தமது பயணத்தை குறித்து தெரிவித்துள்ளார். இது பாதுகாவல் அதிகாரிகளுக்கு சிரமத்தை அளித்துள்ளது என்றும் அவர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
உயர் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் காங்கிரஸ் தலைவரின் பாதுகாப்பில் இதுபோன்ற குளறுபடிகள் நேர்வது அதிகமாகிவிட்டது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.