தமிழர்கள் உலகெங்கிலும் பரவி, தங்களின் திறமையால் பலவிதங்களிலும் ஆளுமை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பாகுபாடுகளைக் கடந்து, தமிழர்களை ஒருங்கிணைத்து, ஒன்றுபட்டு முன்னேற உதவிபுரிந்து வருகிறது இந்த வளைகுடாப்பகுதித் தமிழ் அமைப்பு.
இந்தத் தமிழ் அமைப்பு இ.இ.ஜி (E.E.G ) என்று முத்தாய்ப்பாக மூன்று பணிகளை முன்னெடுத்து மிகச் சிறப்பாக செய்து வருகிறது.
அதென்ன E.E.G?
முதல் எழுத்தான “E” என்பது Emergengy-யைக் (அவசரச் சேவை) குறிக்கிறது.
இரண்டாம் எழுத்தான “E” என்பது Education-னைக் (கல்விச் சேவை) குறிக்கிறது.
மூன்றாம் எழுத்தான “G” என்பது Group benefits-ஐக் (பொதுச்சேவை) குறிக்கிறது.
பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைத்தளங்கள் மூலம் தனித்தனியே குழுக்களை இந்த சேவைகளை உருவாக்கி சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது.
அவசரச்சேவை (Emergency):
மருத்துவ உதவி, மருத்துவ வழிகாட்டுதல், உயிர்காக்கும் பணிகள் ஆகியவை இதில் அடங்குவன. ஆங்காங்கே இருந்தபடியே அவசர உதவிக்காக உதவும் தொலைபேசி எண்களைப் பகிர்ந்து ஒருங்கிணைத்து பணியாற்றுகின்றனர்.
ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி தன்னார்வலர்கள் பொறுப்பேற்று, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், மருத்துவர்களிடம் இருந்து ஆலோசனைப்பெற உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்காக, ஹோமியோபதி, சித்த மருத்துவர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கிப் பயன்படுத்திவருகின்றனர்.
இதன் மூலம், மருத்துவ உதவி தேவைப்படுகின்றவர்கள் நேரடியாக ஹோமியோபதி, சித்த மருத்துவர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறும் வகையில் அந்த வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்துள்ள மருத்துவர்களும் இரவுபகல் பாராமல் உதவி செய்துவருகின்றனர்.
கல்விச் சேவை (Education):
மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள், உதவிகள், கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தல், மாணவர்களுக்கு பெற்றோர்களிடம் இருந்து உரிய வழிகாட்டுதல்கள் போன்றவற்றைப் பெறவும் இந்த அமைப்பு வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் உரிய வகையில் மாணவர்கள் உயர்கல்வி பற்றி திட்டமிடவும், ஐயங்களைப் போக்கிக் கொள்ளவும் உறுதுணையாக இருந்துவருகிறது.
பொதுச்சேவை (Group benefits):
கலிபோர்னியாவில் வாழும் தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து, அவர்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படும் பல்வேறு வகையான உதவிகளையும் இவ்வமைப்பு செய்துவருகிறது.
எங்கெங்கே என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பதுமுதல், எலக்ட்ரீஷியன், பிளம்பர்கள் என பல்வேறு பணிகளுக்கு உரிய நம்பிக்கையான ஆட்களை பரிந்துரைக்கும் பாலமாகவும் விளங்குகிறது. இதன்மூலம், மக்கள் அங்கிங்கென அலையாமல், வேலைகளை எளிதாக செய்து முடிக்க உறுதுணையாக செயல்பட்டுவருகிறது. மேலும், யோகா, இயற்கை உணவுமுறைகள் உள்ளிட்ட வழிகாட்டுதல்களும் தகுதியானவர்களைக் கொண்டு அளிக்கப்படுகின்றன.
இவை தவிர, பல்வேறு Meetup நிகழ்ச்சிகளையும் ஏற்பாடுசெய்து தமிழர்களின் ஒற்றுமை வலிமைப்படுத்தப்படுகிறது. கலிபோர்னியாவுக்குப் புலம்பெயர்ந்து வரும் தமிழர்கள் கவலையின்றி வாழ்வதற்கு பேருதவியாக இருக்கிறது இந்த தமிழ் அமைப்பு. மேலும், கலிபோர்னியாவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், தமிழர்களின் அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தியும் வருகிறது.
தன்னலமற்ற தொண்டினை தொய்வின்றிச் செய்துவரும் BayAreaTamils அமைப்புக்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த குழுவில் இணைய.. Facebook.com/groups/bayareatamils