அமெரிக்காவின் க்ரீன் கார்டு வேண்டுமா..?- விண்ணப்பங்களை வரவேற்கும் காக்னிசென்ட்

'அமெரிக்காவின் நிரந்திர குடியுரிமையைப் பெற ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்' என்றதொரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது காக்னிசென்ட் நிறுவனம்.

ஹெச்1பி விசா நிர்வாக நடைமுறையில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் விதிமுறைகளால் இந்தியர்களுக்கே அதிக சிக்கல்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஹெச்1பி விசா மூலம் ஐடி ஊழியர்களே அதிகளவில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பின்னர் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சூழல் இறுக்கமாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு இதே மே மாதத்தில்தான் காக்னிசென்ட் நிறுவனம், தனது ஊழியர்களுக்கான க்ரீன் கார்டு விண்ணப்பப் பணிகளை நிறுத்திவைப்பதாக அதிகாரப்பூர்வமான செய்தி வெளியானது. இந்நிலையில், தற்போது 'ஈபி2' மற்றும் 'ஈபி3' முறைகளின் கீழே க்ரீன் கார்டு வேண்டும் என விரும்பும் காக்னிசென்ட் ஊழியர்கள் அதற்கான விருப்பபடிவங்களை அளிக்கலாம் என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டவர் நிரந்திர குடியுரிமையைப் பெறுவதற்கான வழிகளுள் ஒன்றுதான் 'ஈபி2' மற்றும் 'ஈபி3' விண்ணப்ப முறைகள். இதன் அடிப்படையில் ஒரு துறையில் ஆகச்சிறந்து விளங்கக்கூடிய ஒருவருக்கு அத்துறையிலேயே அமெரிக்காவிலேயே நீடிப்பதற்கு 'ஈபி2' விண்ணப்பம் மூலமும் ஒரு துறையில் சிறந்த திறமை உடையவர் அதே நிலையில் அமெரிக்காவின் நிரந்திர குடியுரிமையைப் பெற 'ஈபி3' விண்ணப்பம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

இந்த நடைமுறையின் கீழே தற்போது காக்னிசென்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான க்ரீன் கார்டு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

Advertisement