அமெரிக்க குடியேற்ற விவகாரங்கள் குறித்த வல்லுநர்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ள ஹெச்-1பி விசா விண்ணப்பங்களுள் பெரும்பான்மையானவை நிராகரிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
கடந்த 2017-ம் நிதியாண்டில், அமெரிக்காவில் பணியாற்ற தேவையான ஹெச்-1பி விசாக்களை அதிகமாக பெற்ற பத்து நிறுவனங்களுள், அமெரிக்காவிலுள்ள மிகப்பெரும் ஆறு தொழில்நுட்ப நிறுவனங்களுள் நான்கு இடம் பெற்றுள்ளன.
கடந்த 2017 நிதியாண்டில் அமேசான் 2,515, மைக்ரோசாஃப்ட் 1,479, இன்டெல் 1,230, கூகுள் 1,213, ஃபேஸ்புக் 720, ஆப்பிள் 673 என்ற எண்ணிக்கையில் ஹெச்-1பி விசாக்களுக்கு அனுமதி பெற்றுள்ளன.
கடந்த நிதியாண்டில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆர் & டி எனப்படும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைக்கு அதிக அளவில் செலவழித்துள்ளன. அமேசான் 22.6 பில்லியன் டாலர், கூகுள் குழுமத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் 16.6 பில்லியன் டாலர், இன்டெல் 13.2 பில்லியன் டாலர், மைக்ரோசாஃப்ட் 12.3 பில்லியன் டாலர், ஆப்பிள் 11.6 பில்லியன் டாலர், ஃபேஸ்புக் 7.8 பில்லியன் டாலர்களை இவ்வகையில் செலவு செய்துள்ளன.
மேலும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்களால் தொடங்கப்பட்டுள்ள பெரும் நிறுவனங்கள் சராசரியாக 760 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. 1990 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவின் உற்பத்தி வளர்ச்சியில் வெளிநாட்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறை பணியாளர்களின் பங்கு 30 முதல் 50 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஹெச்-1பி மறுக்கப்படுவது, அமெரிக்கா செலுத்தி வரும் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும் அபாயம் உள்ளது.