வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் செயற்கை அறிவாற்றல் குறித்த கருத்தரங்கம்

Aug 11, 2018, 17:52 PM IST
கலிபோர்னியா ஃப்ரீமாண்ட்டில் 2018 ஜூலை 14 - 15ம் தேதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற செயற்கை அறிவாற்றல் (ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ்) குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு...
செயற்கை அறிவாற்றல் புரட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள பெரும்பாலான மாணவர்களின் சிந்தனை தூண்டுவதாக இக்கருத்தரங்கு அமைந்தது. பொதுவாக புத்திக்கூர்மை தேவையான  வேலைகளை டிஜிட்டல் கம்ப்யூட்டர் என்னும் எண்ணியல் கணினி அல்லது கணினியால் இயக்கப்படும் இயந்திர மனிதனை கொண்டு செய்யும் தொழில்நுட்பமே செயற்கை அறிவாற்றல் என்று அழைக்கப்படுகிறது.
 
மென்பொருள் பயன்பாட்டை விரிவாக்கவும், அதிகரிக்கவும் செயற்கை அறிவாற்றலை பயன்படுத்துவது பயன்பாட்டு செயற்கை அறிவாற்றல் (அப்ளைடு ஏஐ) என்று கூறப்படுகிறது. மென்பொருள் எழுதப்படுவது, அதன் செயல்திறன் போன்ற அடிப்படை விஷயங்களையே இது மாற்றி விடுகிறது. திரைப்படங்களில் காட்டப்படும் அளவுக்கு செயற்கை அறிவாற்றல் பயன்பாட்டில் நாம் இன்னும் முன்னேறவில்லையென்றாலும், இன்று தொழில்நுட்பங்களை சார்ந்து இயங்கும் அமேசான், ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட பல வர்த்தகங்களில் இதன் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்பதே உண்மை. 
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 12 வயது மாணவனான கனிஷ்க், "ஏஐ இவ்வளவு பெரியதென்று நான் உணராமல் இருந்தேன். இந்த நிகழ்ச்சி எனக்கு பெரிய திறப்பாக இருந்தது. செயற்கை அறிவாற்றலில் நாம் போக வேண்டியது வெகுதூரம் என்றாலும், அது நமக்கு எவ்வளவு அண்மையில் உள்ளதென்றும், சமுதாயத்தில் எவ்வளவு பெரிய பங்கை வகிக்கிறது என்றும் உணர்ந்துகொண்டேன்," என்று கூறினார். தற்போது எட்டாவது கிரேடில் பயின்று வரும் அவர், தாம் வளரும்போது செயற்கை அறிவாற்றல் துறையில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார்.
 
 கருத்தரங்கில் பங்குகொண்ட மாணவர்கள் இணைந்து செய்யும்படியாய், செயற்கை அறிவாற்றல் பயன்படும் சிறு திட்ட செயல்பாடு (ப்ராஜக்ட்) வழங்கப்பட்டது. பாடவேளைகளில் கற்றவற்றை நடைமுறை ரீதியாக புரிந்து கொள்ள அது உதவியாய் இருந்தது. ஆரோக்கியம், நுகர்வோரை புரிந்துகொள்ளுதல், ஆற்றல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அந்த ப்ராஜக்ட் இருந்தது. தொண்ணூறுக்கும் மேற்பட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். பலர் தொலைதூரத்திலிருந்து வந்திருந்தனர். நான்காம் கிரேடு முதல் உயர்நிலை வகுப்புகள் வரை பயிலும் மாணவ மாணவியர் 35 பேர் கலந்து கொண்டனர்.
CSAIL & MIT Sloanஐ சேர்ந்த திரு. ஜோதி பெரியசாமி, செயற்கை அறிவாற்றலின் தேவை மற்றும் பயன்பாட்டினை குறித்து மனங்கவரும் வகையில் விளக்கவுரையாற்றினார். உயர்தொழில்நுட்ப துறையாக இருந்தாலும், மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அவர் எளிமையாக உரையாற்றினார். மாணவர்கள் உள்பட கலந்து கொண்டவர்கள் அனைவருமே முழு நேரமும் ஈடுபாட்டுடன் காணப்பட்டனர். 
 
தற்போது மிகவும் அவசியமான இக்கருத்தரங்களை ஏற்பாடு செய்ததற்காக அனைவரும் BATM அமைப்பை பாராட்டினர். இதுபோன்ற அறிவுசார் நிகழ்வுகளை BATM தொடர்ந்து நடத்தவேண்டும் என்று மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.

You'r reading வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் செயற்கை அறிவாற்றல் குறித்த கருத்தரங்கம் Originally posted on The Subeditor Tamil

More Velinaduval inthiyargal News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை