இந்தியர்களுக்கு டிரம்ப் வைத்த அடுத்த செக்: எச்1பி விசாவிற்கு மீண்டும் புதிய கட்டுப்பாடு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பணிப்புரிவதற்கு வழங்கப்படும் எச்1பி விசாவில், மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து, இந்தியா உள்பட வெளிநாட்டவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அமெரிக்காவில் பணிபுரிவதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இதற்காக எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவின் கீழ், சம்பந்தப்பட்ட நபர் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு அங்கு பணிபுரியலாம். மேலும், அந்த நபர் தங்கள் வேலையின் நிலை பொறுத்து எச்1பி விசாவின் ஆயுட்காலத்தை கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த விதிமுறை தான் அமெரிக்காவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொறுப்பு ஏற்ற பின்னர், அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு நடவடிக்கையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, எச்1பி விசாவில் அமெரிக்காவிற்கு செல்லும் வெளிநாட்டவர்களின் மனைவிகள், அமெரிக்காவில் பணிபுரிய தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், ‘பை அமெரிக்கன் ஹையர் அமெரிக்கன்’ என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரவித்தது.

இந்த நடவடிக்கை வெளிநாட்டவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிரம்ப் மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதில், எச்1பி விசாவில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதாவது, எச்1பி விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கு 3 ஆண்டு காலம் குறைந்தபட்சமாக வழங்கப்படுகிறது. தங்களின் பணி நிலையை வைத்து எச்1பி விசாவை கூடுதல் ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். இதேபோல், கிரீன் கார்டு தேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் கீரின் கார்டு கிடைக்கும் வரை எச்1பி விசாவை புதுப்பித்துக் கொள்ளும் முறை இருந்து வந்தது.

ஆனால், இதன் பிறகு கிரீன் கார்டு கிடைக்கும் வரை எச்1பி விசாவை புதுப்பிக்க அமெரிக்க அரசு தடை விதித்து புதிய கட்டுப்பாடை கொண்டு வந்துள்ளது. எச்1பி விசா காலம் முடிந்ததும் கிரீன் கார்டு கிடைக்கும் வரை விண்ணப்பித்தவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கே திரும்பிட வேண்டும். கிரீன் கார்டு கிடைத்த பிறகு அமெரிக்காவில் குடியேறலாம் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்)ன் தலைமை ஊடக தொடர்பாளர் கூறியதாவது: யுஎஸ்சிஐஎஸ் ஆண்டுதோறும் 3 லட்சத்து 30 ஆயிரம் எச்1பி விசா விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் மட்டும் 6,80,000 எச்1பி விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் இருந்து மட்டும் 3,02,293 விசாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 முதல் 2017ம் ஆண்டு வரையில், அதாவது கடந்த 10 ஆண்டுகளில் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து விண்ணப்பித்த எச்1பி விசாக்களுக்கு தான் அதிகளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 78 எச்1பி விசாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவை தொடர்ந்து சீனா, மூன்றாவதாக கனடா ஆகிய நாடுகள் உள்ளன.

எச்1பி விசா உரிமையாளர்கள் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தால் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் கிரீன் கார்டு கிடைக்கும். அதுவரை எச்1பி விசாவை புதுப்பிக்க முடியாது என்பது தான் இந்த புதிய கட்டுப்பாட்டின் விதி. எச்1பி விசா புதுப்பிக்க முடியாத பட்சத்தில், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்க முடியாது. அதனால், எச்1பி விசா ஆயுட்காலம் முடிந்தால் கிரீன் கார்டு கிடைக்கும் வரை அவர்களின் சொந்த நாட்டிற்கே சென்றுவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement