நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி வானி பறந்து மாடிக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் சாண்ட்டா அனா பகுதி உள்ளது. அந்த சாலை வழியாக நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் சொகுசு கார் ஒன்று படுவேகமாக வந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் ஓட்டுனர் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இடித்த வேகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு பறந்து சீறிய கார், எதிரில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்து நின்றது.
அந்த கட்டிடத்தில், பல் டாக்டர் ஒருவருக்கு சொந்தமான கிளினிக் உள்ளது.
நோயாளிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் அறைக்குள் தான் சம்பந்தப்பட்ட கார் புகுந்துள்ளது. இருப்பினும், காரின் முன்பகுதி அறைக்குள்ளும், பெரும்பாலான பின்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் காட்சியை கண்ட அப்பகுதி மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிரேன் மூலம் அந்த காரை அப்புறப்படுத்தினர்.
மேலும், அந்த காரை ஓட்டிச் சென்றவர் யார், அவரது நிலைமை என்ன என்பது தொடர்பான தகவல்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.