ஒசாமா பின்லேடன் மகனின் சவுதி குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்ப்பு உள்ளிட்ட உலகை உலுக்கிய பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர் பின்லேடன். பாகிஸ்தானில் பதுங்கிக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டிவிட்டு வந்தார். பாகிஸ்தானுக்குள் அதிரடியாக நுழைந்து ஒசாமா பின்லேடனை அமெரிக்கா ராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த படுகொலைக்கு பழிதீர்ப்பேன் என அமெரிக்காவுக்கு அதிரடியாக அறிவித்தார் அவரது மகன் ஹம்சா பின்லேடன். அதன்படி இப்போது பின்லேடன் மகன் ஹம்சா தான் அல்-கொய்தா அமைப்பை வழிநடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள அமெரிக்க அரசு, ஹம்சாவை பற்றி தகவல் கொடுப்போருக்கு ஒரு மில்லியன் டாலரும் பரிசாக அறிவித்துள்ளது.
இதனால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஹம்சா சவுதியில் குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம், 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பிறந்தார் ஹம்சா. தனது தந்தையின் மறைவுக்குப் பின் ஆப்கானிஸ்தானிலும், சவுதி அரேபியாவிலும் மாறி மாறி வாழ்ந்து வந்தார். இதனால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் எனத் தகவல் தெரியவில்லை. அவர் சவுதியில் இல்லை என்று அந்நாட்டு அரசு தற்போது தெரிவித்துள்ளது. மேலும் கடந்த நவம்பர் மாதமே ஹம்சா பின்லேடனின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாக சவுதி அரேபிய அரசு கூறிவந்தது.
ஆனால் அமெரிக்க அறிவிப்புக்கு பின் நேற்று தான் அதிகாரபூர்வமாக அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. சவுதியின் இந்த அறிவிப்பால் தற்போது ஹம்சா எங்கு இருக்கிறார் என்பதில் மேலும் குழப்பம் நிலவி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு தன் தந்தையின் மரணத்துக்கு பழிதீர்ப்பேன் என அவர் வெளியிட்ட வீடியோவில் தான் அவரை கடைசியாக பார்த்தது. அதன்பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை. இதனால் அவரது தோற்றம் எப்படியிருக்கும் என்பதுகூட தெரியாது. இதனால் தான் அமெரிக்க அரசு தற்போது இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.