பிரேசிலின் சாவோ பாலோ நகரில் உள்ள ஜுன்டியாய் பகுதியில் செயல்பட்டு வரும் வனவிலங்கு ஆராய்ச்சிக் கூடத்தில், செயற்கை கருவூட்டலின் மூலம் உலகின் முதல் சிறுத்தைக் குட்டி பிறந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த சிறுத்தைக் குட்டியை அதன் தாய் சிறுத்தை இரண்டே நாட்களில் கடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
பியாங்கா எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுத்தைக்கு செயற்கை கருவூட்டல் மூலம் மட்டா சிலியார் எனும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் செயற்கை முறையில் கருவூட்டல் முயற்சியை மேற்கொன்டனர்.
சிறுத்தை இனங்கள் அழிந்து வருவதன் காரணமாக, இந்த புதிய ஆராய்ச்சியில், ஈடுபட்ட அந்த மட்டா சிலியார் குழுவுக்கு, சிறுத்தைக் குட்டி பிறந்தது வெற்றியைத் தந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக தனது குட்டியை பிறந்து இரண்டே நாட்களில், அதன் தாய் சிறுத்தையான பியாங்காவே கடித்துக் கொன்ற சம்பவம் அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், எதிர்காலத்தில், சிறுத்தை இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றும் ஆராய்ச்சி வெற்றியடைந்ததால், அந்த குழுவினர் மகிழ்ச்சியுடனே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தாய் சிறுத்தையின் இந்த நடவடிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையும் ஆலோசித்து வருவதாக அக்குழுவின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.