தாய்லாந்து நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் செயல்பட்டாலும் மன்னர் பெயரால்தான் அரசு செயல்படும். கடைசியாக, நீண்ட காலமாக மன்னராக இருந்த பூமிபால் அதுல்யாதேஜ் கடந்த 2016ம் ஆண்டில் மரணமடைந்தார். அவரது மகன் மகா வஜிரலாங்கோர்ன் அடுத்த மன்னராக தேர்வானார். ஆனாலும், பூமிபால் மறைந்து ஓராண்டுக்கு பின்னர் சில சம்பிரதாயங்களை பின்பற்றிய பிறகுதான் முழுப் பொறுப்பேற்க முடியும்.
இந்த சூழ்நிலையில், வரும் சனிக்கிழமை வஜிரலாங்கோர்ன், புத்தமதச் சடங்குகளை நடத்தி புதிய மன்னராக முழுப்பொறுப்பு ஏற்கவிருக்கிறார். இதற்கிடையே, அவர் திடீரென தனது பாதுகாப்பு பணியில் துணை தலைமை செக்யூரிட்டி கார்டு ஆக பணியாற்றிய சுதிதா திட்ஜாய் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அரண்மனையில் நடந்த திருமண விழாவில், மன்னருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர், அரண்மனையின் கெசட்டில் இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே1ம் தேதி இரவு தாய்லாந்து தொலைக்காட்சிகளில் திருமணப் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின. ஏற்கனவே மன்னருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருப்பதாக அரசல்,புரசலாக அரண்மனையில் தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன. அதை தற்போதைய திருமணச் செய்தி உண்மையாக்கி விட்டிருக்கிறது.
சுதிதா திட்ஜாய் கடந்த 2014ம் ஆண்டில் தாய்லாந்து ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக இருந்தார். 2016ம் ஆண்டில் தாய்லாந்து ராணுவப் படையில் சேர்ந்தார். அடுத்த ஆண்டில் மன்னரின் துணை தலைமை செக்யூரிட்டியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் ராணி சுகிதா திட்ஜாய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இன்னொரு முக்கியமான சேதி என்ன தெரியுமா? 66 வயதான மன்னர் வஜிரலாங்கோர்னுக்கு ஏற்கனவே மூன்று முறை விவாகரத்து ஆகி, 7 குழந்தைகளும் உள்ளனர்.