ரஷ்யாவில் 233 பேருடன் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் மீது பறவைகள் மோதியதில் விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்தன. இதனால் அவசரமாக மக்காச்சோளக் காட்டில் பத்திரமாக தரையிறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானியின் சாதுர்யத்துக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
ரஷ்யா தலைகர் மாஸ்கோவில் இருந்து, கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற இடத்துக்கு இன்று காலை 226 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் பேருடன் ஏர்பஸ் 321 ரக பயணிகள் விமானம் கிளம்பியது. விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில் பறவைக் கூட்டம் ஒன்று விமானம் மீது மோதியது.
மோதிய வேகத்தில் சில பறவைகள், விமான என்ஜின்களில் சிக்கிக் கொண்டன. இதனால் விமானத்தின் இரு எஞ்சின்களும் திடீரென செயலிழந்தன. விமானத்திற்குள் விளக்குகள் அணைந்தன. விமானம் நடுவானில் தத்தளிக்க ஆரம்பித்தது. பயணிகளும் பீதிக்கு ஆளாகினர்.
என்ஜின்கள் செயலிழந்து விட்ட நிலையில், விமானியோ சமயோசிதமாக, மக்காச் சோளம் பயிரிடப்பட்டிருந்த வயலுக்குள் விமானத்தை இறங்கச் செய்தார். விமானம் வயலில் தரையிறங்கிய அடுத்த நொடியே, அவசர கால கதவுகளை ஊழியர்கள் திறந்துவிட்டு அனைத்து பயணிகளையும் அவசரமாக வெளியேறச் செய்தனர்.நல்லவேளையாக லேசாக சேதமடைந்த விமானமும் தீப்பிடிக்கவில்லை.இதனால் உயிரிழப்பு ஏதுமின்றி அத்தனை பேரும் தப்பினர்.
விமானம் வயலில் மோதி குலுங்கியதாலும், அவசர வழியில் பதற்றத்தில் குதித்ததாலும் 51 பயணிகள் காயமடைந்ததாகவும் இதில் 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் இரு என்ஜின்கள் செயலிழந்த நிலையில், தரையிறக்கும் கியரும் வேலை செய்யாத நிலையிலும் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி டாமிர் யுசுபோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 233 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டார் என புகழ்ந்துள்ளன பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரை, அந்நாட்டு மீடியாக்கள் ஹீரோவாக சித்தரித்து பாராட்டி வருகின்றன.