3 மாத கால போராட்டம் சர்ச்சை மசோதாவை வாபஸ் வாங்கினார் கேரி லாம்!

by Mari S, Sep 4, 2019, 20:59 PM IST

ஹாங்காங்கில் கடந்த மூன்று மாதங்களாக வெடித்து வரும் போராட்டத்திற்கு ஒருவழியாக தீர்வு கண்டுள்ளார் ஹாங்காங் தலைவர் கேரி லாம்.

ஹாங்காங்கில் வசிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அவர்களை விசாரிக்க சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட மசோதா சில மாதங்களுக்கு முன்னர், ஹாங்காங்கில் கொண்டுவரப்பட்டது.

இந்த மசோதாவை எதிர்த்தும், தலைவர் கேரி லாமை பதவி விலக கோரியும், ஹாங்காங்கில் கடந்த மூன்று மாதங்களாக பல கலவரங்களும், போராட்டங்களும் வெடித்தன.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ஹாங்காங் அரசு போலீஸ்காரர்களை ஏவியது. பலபேரை ஈவு இரக்கமின்றி அடித்தும், கைது செய்தும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், போராட்டங்கள் நின்றபாடில்லை, அதற்கு மாறாக மேலும் வலுத்தன. இந்த போராட்டங்களை கவனித்த உலக நாடுகள், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். ஆனால், இதனை சீனாவும், ஹாங்காங் அரசும் அனுமதிக்காமல், எதிர்ப்பு தெரிவித்தன.

மூன்று மாதங்களாக தொடர்ந்த போராட்டம் கடந்த ஒரு வார காலமாக உச்சக்கட்ட போராட்டக்களமாக மாறிய நிலையில், இன்று ஹாங்காங் தலைவர் கேரி லாம், அந்த சர்ச்சைக்குரிய சட்டமசோதாவை திரும்பப் பெறுவதாகவும், இனிமேல், அதுபோன்ற சட்ட மசோதா அமலாக்கப்படாது என்றும் உறுதியளித்தார்.

இதனால், போராட்டக்காரர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக, மக்கள் மகிழ்ச்சி அடைந்து வந்தாலும், அவர்களின் மேலும், சில கோரிக்கைகள் நிறைவேறாத வரையில் போராட்டங்கள் தொடரும் எனவும் சமூக வலைதளத்தில் போராட்டக்காரர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஹாங்காங் போலீசாரால், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதும் மற்றும் அனைத்திற்கும் காரணமாக கேரி லாம் பதவி விலக வேண்டும் என்றும், மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர் பதவியில் அமரும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.


Leave a reply