பருவநிலை மாற்றத்தால் உலகம் அழிந்து வரும் நிலையில், காசு, பணம், பொருளாதாரம் என போலி வாக்குறுதிகள் கொடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் என உலக தலைவர்களை சாடிய சிறுமி கிரேட்டா தன்பர்குக்கு வாழ்வாதார உரிமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று ஜெனிவாவில் ஐ.நா., சார்பாக நடத்தப்பட்ட பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கிரேட்டா தன்பர்க், கடலுக்கு அப்பால் இருக்கும் கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டிய சிறுமி நான், இங்கே உங்கள் முன் உரையாற்றுகின்றேன்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தி இயற்கை வளங்களை அழித்துவிட்டு பருவநிலை மோசமாக மாற காரணம் ஆனவர்கள், எங்களது எதிர்கால கனவுகளை களைத்து விட்டு, பணம், பொருளாதார முன்னேற்றம் என வெட்டிக் கதைகளை கூறி வருகின்றனர். ஹவ் டேர் யூ என்ற உங்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் என்ற ஆக்ரோஷ தொனியில் உலக தலைவர்களை பார்த்து அந்த சிறுமி கேள்வி கேட்டார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அந்த சிறுமி, சில ஆண்டுகளாக தனி ஒருத்தியாக வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கு செல்வதை புறக்கணித்து உலக மக்களிடம் பருவ மாற்றம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது ஐ.நா.வில் உலகின் நலனுக்காக ஆக்ரோஷமாக பேசிய அந்த சிறுமியின் வீடியோ உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால், அதிபர் டிரம்ப், அந்த பெண்ணின் பேச்சை சற்றும் மதிக்காமல், மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தை என கிண்டல் அடித்து ட்வீட் போட அவருக்கு எதிராக கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ஸ்வீடன் அரசு மாற்று நோபல் என அழைக்கப்படும், நோபல் பரிசுக்கு நிகரான வாழ்வாதார உரிமை விருதினை அந்த சிறுமிக்கு வழங்கி கெளரவித்துள்ளது.