கனடாவின் கிங்மேக்கர் இந்தியர் ஜக்மீத்சிங்.. என்.டி.பி. ஆதரவில் ஜஸ்டின்..

by எஸ். எம். கணபதி, Oct 23, 2019, 10:09 AM IST

கனடாவில் கிங்மேக்கராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத்சிங் உருவெடுத்துள்ளார். அவரது தலைமையிலான என்.டி.பி. கட்சியின் ஆதரவில்தான் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கனடாவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 338 தொகுதிகளில் ஆளும் லிபரல் கட்சி 157 இடங்களையும், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. தனிப்பெரும் கட்சியாக லிபரல் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், மெஜாரிட்டி எண்ணிக்கையான 170க்கு இன்னும் 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில், பிளாக் குயெபெக்கோயிஸ் 32 இடங்களையும், நியூ டொமாக்ரடிக் பார்ட்டி(என்.டி.பி) 24 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. எனவே, இந்த கட்சிகளின் ஆதரவில்தான் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பதவியேற்க முடியும்.

என்.டி.பி. கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத்சிங் உள்ளார். இந்த கட்சி கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் 44 இடங்களை கைப்பற்றி 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அப்போது தாமஸ் முல்கெயிர் தலைவராக இருந்தார். என்.டி.பி, இந்த முறை பாதி இடங்களை கோட்டை விட்டாலும், 22 இடங்களை கைப்பற்றியிருப்பதே ஆட்சியை நிர்ணயிக்கும் இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் ஆதரவுடன்தான் ஜஸ்டின் ஆட்சி அமைப்பார் என்றும், ஜக்மீத்சிங் கனடாவில் இப்போது கிங்மேக்கர் என்றும் அங்குள்ள பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஜக்மீத்சிங் கூறுகையில், நாங்கள் எப்போது கனடாவின் முக்கியப் பிரச்னைகளுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று குறிப்பிட்டார். மேலும், ஜஸ்டினுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் என்.டி.பி. கட்சியில் வென்ற 44 பேரில் 19 பேர் இந்திய வம்சாவளியினர். அவர்களில் 18 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். முந்தைய ஜஸ்டின் அரசில் ஹர்ஜித் சஜ்ஜன், அமர்ஜித் சோஹி, நவ்தீப் பெயின், பர்தீப் சச்சார் ஆகிய 4 சீக்கியர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


More World News