அமெரிக்காவில் பள்ளியில் சக மாணவி ஒருவரையும், ஒரு மாணவனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மாணவன் தற்கொலைக்கு முயன்றான். தனது பிறந்தநாளில் அவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் பள்ளிகளில் மாணவர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சம்பவம் அதிகமாகி விட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் சாந்தா கிளாரிடாவில் உள்ள சாகஸ் உயர்நிலைப் பள்ளியில் நேற்று(நவ.14) அந்நாட்டு நேரப்படி காலை 7.30 மணிக்கு அந்த பயங்கரச் சம்பவம் நடந்தது. ஒரு மாணவன் திடீரென சக மாணவ, மாணவியரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார்.
இதையடுத்து, மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் எடுத்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 16 வயது மாணவி ஒருவரும், 14 வயது மாணவனும் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும், ஒரு மாணவன், 2 மாணவிகள் பலத்த காயமடைந்தனர். அவர்களையும் துப்பாக்கியால் சுட்ட அந்த மாணவன் பிறகு தன்னையும் துப்பாக்கியால் சுட்டான். காயமடைந்தவர்களும், அந்த மாணவனும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் 2500 மாணவர்கள் படிக்கும் அந்த பள்ளியில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், பெற்றோர் அலறியடித்து பள்ளிக்கு வந்தனர். தங்கள் குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா என்று விசாரித்தனர்.
அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிகளில் மட்டும் சுமார் 300 குழந்தைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். துப்பாக்கி லைசென்ஸ்களை கட்டுப்படுத்தக் கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பல முறை கடுமையான விவாதங்களும் நடைபெற்றிருக்கிறது.