இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியாவுடன் பல நெருங்கிய தொடர்புகள் உள்ளது.
இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே(70), ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணசிங்கே பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா போட்டியிட்டனர். மொத்தம் 35 பேர் வரை போட்டியிட்டாலும், இந்த இருவருக்கு இடையில்தான் நேரடி போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்து 60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 52.25 சதவீத வாக்குகளும், சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, புதிய அதிபராக நாளையே பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை விடுதலை கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான டான் ஆல்வின் ராஜபக்சே, 1950களில் எம்.பியாகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். இவரது 5வது மகனும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டின் புதிய அதிபராகியுள்ளார். கோத்தபய ராஜபக்சே கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் பட்டம் படித்தார். அதன்பின்பு, ராணுவப் பயிற்சி பெற்று 1971ம் ஆண்டில் இலங்கை ராணுவத்தில் பணியில் சேர்ந்து பல பதவி உயர்வுகளை பெற்றார்.
1980ம் ஆண்டில் இந்தியாவின் அசாம் மாநிலக் காடுகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் படையில் பயிற்சி பெற்றார். 1983ல் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திலும், சென்னை பல்கலைக்கழகத்தில் ராணுவ படிப்பிலும் சேர்ந்து பட்டங்களை பெற்றார். 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார்.
கடந்த 1998ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே உள்பட அவரது குடும்பத்தினர் 2005ம் ஆண்டில் மகிந்த ராஜபக்சே அதிபராகும் வரை அமெரிக்காவிலேயே இருந்தனர். அந்த சமயத்தில் அவர் அமெரிக்க குடியுரிமை வாங்கி விட்டார் என்றும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்று இப்போது நடந்த தேர்தலில் கூட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன.
மகிந்த ராஜபக்சே அதிபரானதும் கோத்தபயாவை ராணுவச் செயலாளர் ஆக்கினார். 2005 முதல் 2014ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்த போதுதான், விடுதலைப் புலிகளுடன் இறுதிப் போர் நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி, உலகம் முழுவதும் எதிர்ப்பு குரல் ஒலித்தும் கூட, அதை பொருட்படுத்தாமல் ராணுவம் போரை நடத்தியது. போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை ராணுவம் கொன்றது.
கோத்தபய ராஜபக்சேவுக்கு புத்தமதத்தை பின்பற்றும் சிங்களர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம். இலங்கையில் தமிழர்களை போல், முஸ்லிம் மதத்தினரும் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கும், புத்தமத சிங்களர்களுக்கும் இடையே அடிக்கடி இனக்கலவரங்கள் ஏற்படுவதுண்டு. இதில் முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது ஐ.எஸ். தீவிரவாதிகள், இலங்கை சர்ச்சுகளில் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளில் 269 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு, இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா போடுவதற்கு கூட தடை விதிக்கப்பட்டது. முஸ்லிகள் மீதான பாதுகாப்பு படையினரின் சந்தேகப் பார்வையால், அவர்கள் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். அதனால், அவர்களுக்கும், தமிழர்களுக்கும் கோத்தபய ராஜபக்சே வெற்றி, கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையாகாது.