சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. மேலும் 4500 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதையடுத்து, அந்த நகருக்கு சீல் வைக்கப்பட்டு, விமானநிலையம், பேருந்து நிலையம் என்று அனைத்து இடங்களிலும் மக்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
ஆனாலும் இந்த வைரஸ் சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. மேலும், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. தற்போது, இந்த வைரஸ் தாக்குதல் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள், சீனாவில் உள்ள தங்கள் நாட்டு பிரஜைகளை திருப்பி அழைத்து வர ஏற்பாடுகளை செய்துள்ளன. பல ஆயிரக்கணக்காேனார் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவும் சீனாவில் தங்கி படிக்கும் மாணவர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வருகிறது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 24 பேர் நேற்று ஒரே நாளில் மரணமடைந்தனர். இன்று வரை பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. உகான் நகரில் மட்டுமே இது வரை உயிரிழப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், நேற்று தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவர் பலியாகியுள்ளார். அதே போல், ஹெனான், ஹெபெய், ஹெர்லோஜியாங், ஷாங்காய் போன்ற நகரங்களிலும் கொரோனா வைரஸ் நோய் பரவியுள்ளது. இன்று வரை 4500 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல், ஜெர்மனியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 50 நாடுகளில் இந்த நோய் பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.