தினமும் ஐந்து மணி நேர போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற ஐநாவின் கோரிக்கைகள் முதல் நாளே சீர்குலைந்து போனது.
ஐநாவின் கோரிக்கையை ஏற்று, கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டு இருந்தார்.
இந்த போர் நிறுத்தம் செவ்வாய்கிழமை தொடங்கும் என்றும், மேலும், பொதுமக்கள் வெளியேறுவதற்கான "மனிதாபிமான பாதைகள்" உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த போர் நிறுத்தம் முதல் நாளே சீர்குலைந்து போனது.
இந்த போர் நிறுத்தம் சீர்குலைந்து போனதற்கு எதிர்தரப்புதான் காரணம் என்று சிரியா கிளர்ச்சியாளர் தரப்பும், அரசு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மக்கள் வெளியேறும் பாதை மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சிரியா அரசை ஆதரித்துவரும் ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது.
மக்களை வெளியேற்றுவதற்காகவும், மருத்துவ உதவிகளை மேற்கொள்வதற்காகவும் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்தின் போது, சிரியா அரசு படைகள் வான் தாக்குதல் தொடுத்ததாக, பிரிட்டனை சேர்ந்த ஒரு கண்காணிப்புக் குழு கூறி உள்ளது.
ஐ.நா செய்திதொடர்பாளர் ஒருவர், இந்த சண்டையால், தேவையானவர்களுக்கு உதவிகளை செய்ய முடியாமல் போய்விட்டது என்று கூறினார்.
இந்த தற்காலிக போர் நிறுத்தம் புதன்கிழமை காலை முதல் மீண்டும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவில் நடைபெறும் போருக்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு, குழந்தைகள் உயிரிழந்தும் காயம்பட்டும் கிடக்கும் காட்சிகள் உலகையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளன.