உலகம் முழுவதும் கொரோனா சாவு 18,902 ஆக உயர்வு.. 4.22 லட்சம் பேர் பாதிப்பு

by எஸ். எம். கணபதி, Mar 25, 2020, 10:05 AM IST

உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 24) வரை 4 லட்சத்து 22,759 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மொத்தம் 18,902 பேர் உயிரிழந்துள்ளனர்.


சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியுள்ளது. சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 24) வரை 4 லட்சத்து 22,759 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மொத்தம் 18,902 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 9,102 பேர் குணமடைந்திருக்கிறார்கள். தற்போதைய நிலையில் சுமார் 3 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 13,095 பேருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.சீனாவில் மொத்தம் 81,218 பேருக்கு கொரோனா தொற்று பாதித்தது. இவர்களில் 73,650 பேர் வரை குணமாகி விட்டார்கள். நேற்று புதிதாக 47 பேருக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இது வரை 3,281 பேர் பலியாகியுள்ளனர்.


இத்தாலியில்தான் அதிகபட்சமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 4 நாட்களாக தினமும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். நேற்று மட்டும் 743 பேர் இறந்துள்ளனர். இந்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 6,820 ஆக உயர்ந்திருக்கிறது.
ஸ்பெயினில் 39,673 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 2,696 பேர் உயிரிழந்துள்ளனர். இதே போல், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்தியாவில் நேற்று வரை 519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 10 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். 40 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.


Leave a reply