உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டி விட்டது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 4 லட்சத்து 35,160 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொடூர ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்று(ஏப்.9) காலை நிலவரப்படி, 15 லட்சத்து 19,571 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 88,550 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 31,014 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக, அமெரிக்காவில்தான் 4 லட்சத்து 35,160 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு நேற்று வரை 14.797 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ஒரு லட்சத்து 48,220 பேருக்கு கொரோன தொற்று பாதித்துள்ளது. இதில் 14,792 பேர் உயிரிழந்துள்ளனர்.இத்தாலியில் ஒரு லட்சத்து 39,422 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 17,669 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியில் ஒரு லட்சத்து 13,296 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில், 2,349 பேர் உயிரிழந்தனர். சீனாவில் 81,865 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் 3,335 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பிரான்சில் ஒரு லட்சத்து 12,950 பேருக்குத் தொற்று பாதித்த நிலையில், அங்கு 10,869 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.