ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தைச் சீனா கொண்டு வந்திருப்பது, ஹாங்காங் மக்களுக்கு மட்டுமல்ல, சீன மக்களுக்கும் துயரத்தைத் தரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தது. அதன்படி, ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரைச் சீனாவுக்குக் கடத்தி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. இதை ஹாங்காங்கில் மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தியதால், தற்காலிகமாக அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நேரத்தில் சீனாவில் உள்ள கம்யூனிச அரசு சத்தமில்லாமல் ஹாங்காங் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. இது பற்றி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கருத்து தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சீனா இது வரை ஒரே நாடு, 2 நடைமுறைகள் என்ற அளவில் ஹாங்காங்கை நடத்தி வந்தது. தற்போது ஒரே நாடு, ஒரே நடைமுறை என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறது.
இதன்மூலம், ஹாங்காங் மக்களுக்கு மட்டுமல்ல, சீன மக்களுக்கும் துயரம்தான். உலக மக்களுக்கே இது துயரமானதுதான். ஹாங்காங் அதன் சிறப்பை இழந்து விட்டது. ஹாங்காங்குடன் கொண்டிருக்கும் சிறப்புத் தொடர்புகளைக் கைவிடுவதற்கு நான் அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார். மேலும், சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சீன மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட முடிவுகளை டிரம்ப் அரசு எடுக்கவுள்ளது.