வடகொரியா உடனான உறவுச் சிக்கலைத் தீர்க்க சீனா பேருதவியாக இருந்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியா- அமெரிக்கா இடையில் நிலவும் பிரச்னை முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தெரிகிறது. சில நாள்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் தென் கொரிய அரசு அதிகாரிகளும், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க உடனும் வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்திருந்தது. இதற்கு, ட்ரம்ப்பும் ஒப்புக்கொள்ளவே, இரு நாட்டு உறவிலும் புது அத்தியாயம் எழுதப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் இன்று தனது அதிகராபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், `சீன அதிபர் ஜின் பிங் உடன் வடகொரிய விஷயத்தைப் பற்றி வெகு நேரம் பேசினேன். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் வடகொரியாவுடனான உறவுச் சிக்கலை தீர்த்துக் கொள்ள அமெரிக்கா முன் வந்திருப்பதை ஜின் பிங் பாராட்டினார். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை சீனா, பேருதவியாக இருந்து வருகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.