கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டிருக்கும் நிலையில் முதல் நாடாக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் கூறினார். மேலும், ``உலகில் முதல் முறையாக கொரோனாவுக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக என்னுடைய மகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்காக முன்பே ரஷ்யா பெரிய அளவில் முயற்சிகளைச் செய்துவந்தது. அதன்படி, சில வாரங்களில் உற்பத்தி தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு வாக்கில் பல லட்சம் டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும்" என்றும் பேசினார் புதின். ரஷ்யாவின் இந்த முயற்சிக்குப் பாராட்டுகளை விட, சந்தேகமே அதிகம் எழுப்பப்பட்டது. ரஷ்யாவின் தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை அங்கீகரிக்கவில்லை. இதற்கிடையே, 1996-ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற மருத்துவ விஞ்ஞானி பீட்டர் டோஹெர்டி பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், ``ரஷ்யாவின் ஸ்புட்னிஸ்-5 கரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பும், செயல்பாட்டுத் திறன் தான் கவலைப்படைக்குரிய விஷயம். ஸ்புட்னிஸ்-5 தடுப்பு மருந்து கிளினிக்கல் பரிசோதனைக்கு வராமலே கண்டுபிடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இம்மருந்தின் முதல் கிளினிக்கல் பரிசோதனை முடிந்து, 2ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடந்து வருகிறது. நாங்கள் இந்த மருந்தைக் கண்டுபிடித்துவிட்டால், ஏழை நாடுகளுக்குத் தான் முதலில் முன்னுரிமை அளித்து வழங்க உள்ளோம்.
குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும், தடுப்பு மருந்துக்கான சந்தையிலும் எதிர்காலத்தில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக அமையும். இவையே உலகின் பொருளாதாரம் விரைவாக இயல்புநிலைக்கு வருவதற்கான முயற்சி தான்" எனக் கூறியுள்ளார்.