வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் இடையில் சீக்கிரமே சுமூக தீர்வு எட்ட சந்திப்பு நடக்கப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த சந்திப்பு நடக்குமா என்பதே கேள்விக்குறி ஆகியுள்ளது.
வடகொரியா, அணு ஆயுதச் சோதனைகள் செய்வதை நிறுத்தி பல வாரங்கள் ஆகிவிட்டன. இதனால், தென் கொரியாவும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. யாரும் எதிர்பாராத விதமாக வடகொரியாவும் அதற்கு சம்மதம் தெரிவித்தது மட்டுமல்லாமல், அதிபர் கிம் அவர்களே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, `அமைதி நோக்கித் திரும்ப விரும்புகிறோம்' என்று அறிக்கை விட்டார்.
இதன் அடுத்தக் கட்டமாக, தென் கொரிய அதிகாரிகள் மூலம் கிம், ட்ரம்ப்பை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பும் இதற்கு சம்மதம் தெரிவிக்க, இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதோ இந்தச் சந்திப்பு நடுக்குமா என்பதே கேள்விக்குறி ஆகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், `வடகொரியாவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலையும் நாங்கள் நேரடியாகப் பெறவில்லை. உண்மையில் நாங்கள் அவர்களிடமிருந்து நேரடியானத் தகவலைத் தான் பெற விரும்பினோம். அது வரும் வரை பேச்சுவார்த்தைக்கான சாத்தியக் கூறுகள் குறைவே' என்று பேசி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதித் திரும்புமா என்பது இன்னும் கேள்விக்குறியதாகவே இருக்கின்றது.