கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா தாண்டவமாடி வருகிறது. ரஷ்யா உள்பட சில நாடுகள் இதற்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறி வருகின்ற போதிலும் அது பயன்பாட்டுக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், தசை வலி மற்றும் தலைவலி ஆகியவை தான் கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாகக் கூறப்பட்டு வந்தன. ஆனால் இவை மட்டும் இல்லாமல் மேலும் பல புதிய அறிகுறிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து விக்கல் வந்தாலும் கொரோனாவுக்கான அறிகுறி தான் என தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள 2 நோயாளிகளுக்குத் தொடர்ச்சியாக வந்த விக்கல் மட்டுமே அறிகுறியாக இருந்துள்ளது. பொதுவாக கொரோனா நோயாளிகளிடையே இதுபோன்ற அறிகுறிகள் காணப்படுவது மிகவும் அரிதாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது தவிர முடி உதிர்வதும் ஒரு புதிய அறிகுறியாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா குணமாகி 2 மாதம் கழிந்த பின்னரும் சில நோயாளிகளில் முடி உதிர்வது அதிக அளவிலிருந்துள்ளது. இது மட்டுமில்லாமல் இளம் வயதினருக்கு தற்போது புதிய அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. கால் பாதம் மற்றும் விரல்களில் சிவப்பாகவும், மாந்தளிர் நிறத்திலும் தடிப்புகள் காணப்படுகின்றன.
பொதுவாகக் குளிர்காலங்களில் ஏற்படும் உடல் வீக்கத்திற்குச் சமமான இந்த அறிகுறியை 'கோவிட் டோ' என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இத்தாலியில் கொரோனா பாதித்த 88 பேரில் நடத்திய ஆய்வில், 20 சதவீதம் பேருக்கும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்துள்ளன. சிவந்த தடிப்புகள், சிற்றம்மை நோய் தாக்கும் போது உடலில் ஏற்படுவது போன்ற சிறிய தடிப்புகள், தோல் சிவந்து தடிப்பது போன்ற அறிகுறிகளும் தென்பட்டன. சில நோயாளிகளில் தோல் பகுதியில் ரத்தக் கட்டி ஏற்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுபோன்ற புதிய அறிகுறிகள் தற்போது நோயாளிகளிடையே அதிகமாகத் தென்படுவதால் இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.