பாவமன்னிப்பு ரகசியங்களை போலீசில் தெரிவிக்காத பாதிரியார்களுக்கு சிறை

Queensland passes law to jail priests for not reporting confessions of child sexual abuse

by Nishanth, Sep 9, 2020, 17:32 PM IST

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்க பாவமன்னிப்பு ரகசியங்களை பாதிரியார்கள் போலீசிடம் தெரிவிக்க வேண்டும் என்று குயின்ஸ்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பாவமன்னிப்பு கேட்கும் போது பலரும் கூறும் ரகசியங்களை பாதிரியார்கள் வெளியே சொல்வதில்லை. பாவ மன்னிப்பு கேட்பவர்கள் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் கூறும் ரகசியங்களை பாதிரியாரிடம் போலீசார் கேட்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. ஆனாலும் ஆங்காங்கே சில தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பாவமன்னிப்பு ரகசியத்தை வெளியிடுவேன் என்று கூறி 3 பாதிரியார்கள் ஒரு இளம் பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்தது.


இந்நிலையில் குயின்ஸ்லாந்தில் பாவமன்னிப்பு ரகசியங்களை பாதிரியார்கள் போலீசிடம் தெரிவிக்க வேண்டும் என்று அங்கு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சமீபகாலமாக சிறுமிகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் உட்பட வன்முறைகள் அங்கு அதிகரித்து வருவதால் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீசார் கேட்கும்போது பாவமன்னிப்பு ரகசியங்களை பாதிரியார்கள் தெரிவிக்கவேண்டும். அதற்கு மறுத்தால் புதிய சட்டத்தின்படி 3 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.


இதுகுறித்து குயின்ஸ்லாந்து சட்ட அமைச்சர் மார்க் ரயான் கூறியது: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைகளை தடுப்பதற்காக இனிமுதல் கத்தோலிக்க பாதிரியார்கள் பாவமன்னிப்பு ரகசியத்தை கண்டிப்பாக போலீசிடம் தெரிவிக்க வேண்டும். இந்த சட்டம் மூலம் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை சட்டத்தின் முன் கொண்டு வரும் பொறுப்பு சமூகத்தில் உள்ள அனைவருக்கும் இருக்கிறது. இதற்கு முன்பு குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களாக இருந்தால்கூட பாதிரியார்கள் இதுதொடர்பாக போலீசில் எதுவும் தெரிவிப்பது கிடையாது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அனைவரது கடமையாகும் என்று கூறினார்.

You'r reading பாவமன்னிப்பு ரகசியங்களை போலீசில் தெரிவிக்காத பாதிரியார்களுக்கு சிறை Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை