தயார் நிலையில் படைகள்.. கண்டதும் சுட உத்தரவு... கிம் ஜாங்கின் டெரர் உத்தரவு!

by Sasitharan, Sep 11, 2020, 20:06 PM IST

உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இருப்பதை ஒப்புக்கொண்ட நிலையில், தங்கள் நாட்டில் மட்டும் கொரோனா இல்லவே இல்லை என சத்தியம் செய்யாத குறையாக பேசி வந்தது வட கொரியா. அங்கு ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறி வந்தனர். ஆனால் இது அனைத்தும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரைதான். ஆகஸ்ட் 5ம் தேதி அந்நாட்டின் முதல் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது. இதனை அந்நாடே அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்தது. ஏற்கனவே, பொருளாதாரத் தடையை எதிர்கொண்டுள்ள வடகொரியா, இந்த கொரோனா சூழலில் மேலும் பாதிப்பை சந்தித்தது. மேலும் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உணவுப்பொருள் வழங்க முடியாததை அடுத்து, மக்களின் பசியைப் போக்க, அந்நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை இறைச்சிக்காக ஒப்படைக்க வேண்டும் என்று கிம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நியூசிலாந்து ஹெரால்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, இன்னொரு அதிர்ச்சி தகவலை அமெரிக்க படைத்தளபதி ராபர்ட் அப்ராம்ஸ் தெரிவித்துள்ளார். அதில், ``தற்போது வட கொரியாவுக்குள் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய ஜனவரி மாதமே, தனது சீன எல்லையை மூட உத்தரவிட்டார் கிம். சீன எல்லையை மூடியதால் கடத்தல் பொருள்களுக்கான தேவையும், மதிப்பும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. அவர்களின் மூலமாக மேலும் கொரோனா பரவும் என்பதால், அதை கட்டுப்படுத்த சீன -வடகொரிய எல்லையில் இரண்டு கிலோ மீட்டர் பகுதியை, புதிய மண்டலமாக அறிவித்துள்ள கிம், அந்த எல்லைப்பகுதியை அத்துமீறி நுழைபவர்களை, கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக வட கொரியவின் SOF, SF படைகள் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்" என்று கூறியிருக்கிறார்.


More World News