இந்திய வாலிபர் ஒருவர் லண்டனில் வசித்தபோது உடன் வாழ மறுத்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அவருக்கு அங்குள்ள நீதிமன்றம் 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஜிகுகுமார் சோர்தி (வயது 23) என்ற வாலிபருக்கும் பாவினி பிரவின் (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடந்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாழ்க்கைத் துணை விசாவில் ஜிகுகுமார் சோர்த்தி இங்கிலாந்துக்கு வந்துள்ளார்.
திருமணம் செய்து கொண்டபோதும் அவர்கள் இருவரும் தனித்து வெவ்வேறு வீடுகளில் வசித்து வந்துள்ளனர். திருமண உறவு முறிந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி பகல் 12:30 மணிக்கு ஜிகுகுமார், லெய்செஸ்டர் என்ற இடத்திலுள்ள பாவினியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, ஜிகுகுமார், பாவினியை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற லெய்செஸ்டர்ஷையர் போலீஸும் ஈஸ்ட் மிட்லேண்ட் ஆம்புலன்ஸ் சேவையினரும் பாவினி உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
கொலை நடந்து இரண்டு மணி நேரத்திற்குள்ளாக ஜிகுகுமார் சோர்தி லெய்செஸ்டரிலுள்ள ஸ்பின்னி ஹில் காவல் நிலையத்தின் வெளியே போலீஸ் அதிகாரியைச் சந்தித்துத் தான் பாவினியை கத்தியால் குத்தியதாகத் தெரிவித்துள்ளார். உடற்கூராய்வு பாவினி, பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டதால் மரணமடைந்ததாகத் தெரிவித்தது.லெய்செஸ்டர் கிரௌன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கடந்த புதன்கிழமையன்று ஜிகுகுமாருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார். அதன்படி ஜிகுகுமார் சோர்தி குறைந்தது 28 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கவேண்டும்.விசாரணையின்போது ஜிகுகுமாருக்கு வசதியாக விசாரணை நடவடிக்கைகள் குஜராத்தியில் மொழிபெயர்த்துக் கொடுக்கப்பட்டது என்று அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.