அனில் அம்பானி கொடுக்க வேண்டிய 5,300 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வசூலிக்க 3 சீன வங்கிகள் அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கையை எடுக்கத் துவங்கியுள்ளன.சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கி, சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மற்றும் சீனா மேம்பாட்டு வங்கி ஆகிய மூன்றும் அனில் அம்பானியிடம் தங்களுக்கான சட்ட செலவுகளை மீட்டெடுக்கவும் முயற்சி செய்து வருகின்றன. ஒரு காலத்தில் உலகின் 6வது பணக்காரராக இருந்த அனில் அம்பானி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளார். பல கோடி ரூபாய்க் கடன் தொகை செலுத்த முடியாமல் திணறி வருகிறார்.
இந்நிலையில் சீனாவின் 3 வங்கிகளிடம் வாங்கியுள்ள கடன்களுக்கும் அவர் சரியாகத் தவணை தொகை செலுத்தவில்லை. இதனால் அவருக்கு எதிராக மூன்று சீன வங்கிகளும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த மே மாதம் நடந்த விசாரணை முடிவில் மூன்று வங்கிகளுக்கும் சேர வேண்டிய ரூ .7.04 கோடி வட்டி உட்பட ரூ .5,276 கோடி தொகையை அனில் அம்பானி செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொகை ஜூன் 29ம் தேதிக்குள், வட்டி உட்பட 717.6 மில்லியன் டாலராக அதாவது ரூ.5,300 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25ம்தேதி) நடைபெற்றது. அப்போது அனில் அம்பானியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.வங்கிகளின் சார்பில் ஆஜரான வக்கீல் பாங்கிம் தாங்கி க்யூசி, தனது நிலுவைத் தொகையைத் தவிர்ப்பதற்காக அனில் அம்பானி கடுமையாக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.ஆனால் விசாரணையில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்ட அனில் அம்பானி ஊடகங்கள் கூறுவது போல் தான் ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை. என்னிடம் தனிப்பட்ட சொத்துக்களும் இல்லை. என்னிடம் உள்ளதாகக் கூறப்பட்ட சொத்துக்கள் அனைத்து ரிலையன்ஸ் குழுமத்திற்குச் சொந்தமானது என்று கூறினார்.
மேலும் கடன் பட்டு அனைத்து சொத்துகளையும் இழந்து விட்டதாகவும் இந்த சட்ட செலவுகளுக்கு கூட மனைவியின் நகைகளை விற்று, அதன் மூலம் செலவு செய்வதாகவும், தனது செலவுகள் அனைத்தையும் தனது குடும்பத்தினரே பார்த்துக் கொள்வதாகவும் அனில் அம்பானி கூறியதாகச் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.குறுக்கு விசாரணைக்குப் பின் அனில் அம்பானி அளித்த தகவல்கள் அடிப்படையில் சட்டப்பூர்வமாக தங்களுக்கு சேர வேண்டிய கடன் தொகையைப் பெறச் சீன வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள அனில் அம்பானியின் சொத்துக்களை ஏலம் விடத் தேவையான நடவடிக்கைகளை 3 சீன வங்கிகளும் எடுத்து வருகின்றன.