அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆலோசகருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால், டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்புக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தி கொண்டனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகில் பல நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் அதிக அளவில் பரவியுள்ளது. அங்கு இந்நோய்க்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நோய்க்கு மாத்திரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயின் நோய் தடுப்புக்கு ஓரளவு பயன்படுவதாக கூறப்பட்டது.
இதையடுத்து, வாரத்திற்கு ஒரு முறை இந்த மாத்திரைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் சாப்பிட்டு வந்தார். இந்த சூழலில், டிரம்ப்பின் ஆலோசகர் ஹோப்ஸ் ஹிக்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
இதைத் தொடர்ந்து டிரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. ஆனாலும், இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள தொடங்கினர். இது குறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஹோப்ஸ் ஹிக்ஸ் இடைவிடாது தீவிரமாக பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் சோகமானது. தற்போது நானும், மெலனியாவும் பரிசோதனை செய்துள்ளோம். இதன் முடிவுகளை எதிர்நோக்கிய நிலையில் இருவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம் என்று கூறியிருக்கிறார்.