தேர்தல் விவகாரத்தில் ஃபேஸ்புக்கின் பங்களிப்பு இருந்ததாக வெளியான தகவலால் ஃபேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் கணக்குவைத்துள்ள 5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
திருடப்பட்ட தகவல்களை, டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த விவகாரம், உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இது இந்தியாவிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தேர்தலிலும் இந்த உத்தி கையாளப்பட்டதாக கூறப்படுகின்றது. ஃபேஸ்புக் நிறுவனம் விதிகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவைப்பட்டால் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்பவும் முடியும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தவறு நடந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். “இனி இது போன்ற தகவல் திருட்டை ஃபேஸ்புக் சகித்துக்கொள்ளாது. கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை ஃபேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்யும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக வெளியான தகவலால், பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.