கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் கொரோனவிற்கான சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையிலுருந்து வீடு திரும்பினார்.
எழுபத்திநான்கு வயதான அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததின் காரணமாக கடந்த வெள்ளியன்று அதிபர் டிரம்ப் இராணுவ துறையின் வால்டர் ரீட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு ரெமிடீசிவிர் மற்றும் வைரஸ் தடுப்பு ஸ்டெராய்டு மருந்துகள் அளிக்கப்பட்டு வந்தது.சனியன்று காய்ச்சல் கட்டுக்குள் வந்ததோடு மட்டுமல்லாது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.இதனிடையே தன் ஆதரவாளர்களுக்கு ட்விட்டரில் தன் உடல்நிலை பற்றி தெரிவித்து வந்தார்.
மேலும் மருத்துவர்கள் குழு வரும் வியாழனன்று அதிபர் டிரம்ப் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஞாயிறன்று மருத்துவனை முன்பு கூடியிருந்த ஆதரவாளர்களை சந்திக்க தனி காரில் வந்து அவர்களை நோக்கி கையசைத்து நம்பிக்கை அளித்தார்.
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு துறையின் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் சலசலப்பு ஓய்வதற்குள் திங்களன்று மாலை 6.30 மணிக்கு தான் மருத்துவமனையிலுருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக ட்வீட் செய்தார் அதிபர் டிரம்ப்.அதின்படி திங்களன்று மாலை தனி ஹெலிகாப்டரில் வெள்ளைமாளிகையை வந்தடைந்தார்.எந்த உதவியும் இல்லாமல் அவர் இருபது படிக்கட்டுகள் ஏறியது அவரின் ஆதரவாளர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது.ஆனாலும் மாளிகையின் நுழைவாயிலில் அவர் முகக்கவசத்தை நீக்கியது மருத்துவர்களை முகம் சுளிக்க வைத்தது.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவர் வெள்ளை மாளிகையின் மருத்துவ குழுவினரின் இருபத்தினான்கு மணி நேர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு,இராணுவ மருத்துவமனையின் மருத்துவ குழு அளித்த மருந்துகள் அவருக்கு அளிக்கப்படும் என் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை நேரலை செய்தது அடுத்த தேர்தலிலும் அவரின் வெற்றி வாய்ப்பு பலமாக இருப்பதை மறைமுகமாக பறை சாற்றுகிறது.