15 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்... ஆனால் வந்தது 200 பேருக்கும் மேல் சமாளித்தது எப்படி?

To bypass covid guest limit rule in UK Indian origin couple had a drive in wedding

by Nishanth, Oct 8, 2020, 16:12 PM IST

லண்டனில் திருமணங்களில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்திய ஜோடியின் திருமணத்தில் எந்த கொரோனா நிபந்தனைகளையும் மீறாமல் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அசத்தினர்.இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி திருமணங்களில் அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

இந்நிலையில் லண்டனில் குடியேறியுள்ள ஒரு இந்திய ஜோடியின் திருமணம் எந்த கொரோனா நிபந்தனைகளையும் மீறாமல் 200க்கும் மேற்பட்டோரைக் கலந்து கொள்ள வைத்து வித்தியாசமான முறையில் நடத்தி அசத்தியுள்ளனர்.வினல் பட்டேல் மற்றும் ரோமா ஆகியோரின் திருமணம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி லண்டனில் வைத்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

திருமணத்திற்காக 200க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழையும் கொடுத்தாகி விட்டது. ஆனால் அதற்குள் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் இவர்களது திருமணம் தள்ளிப்போனது. நோய் பரவல் குறையும் என்று கருதி ஒவ்வொரு மாதமும் திருமணத்தைத் தள்ளி வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால் ஏற்கனவே திருமணத்திற்கு அழைத்தவர்களை என்ன செய்வது என யோசித்தபோது, அந்த திருமணத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திற்கு ஒரு யோசனை தோன்றியது.

இதன்படி ஏற்கனவே அழைத்திருந்த அனைவரையும் திருமணத்திற்கு வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. திருமணத்தை அங்குள்ள பெரிய பூங்காவில் வைத்து நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. அனைவரும் கார்களில் மட்டும் தான் வர வேண்டுமென்றும் கார்களை சிறிது இடைவெளி விட்டு பூங்காவில் நிறுத்த வேண்டும் என்றும், கார்களை விட்டு இறங்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு முன்னதாக மணமக்கள் இருவரும் ஒரு திறந்த வாகனத்தில் அந்த பூங்காவுக்கு வந்தனர். கார்களில் இருந்தபடியே அனைவரும் அவர்களுக்கு ஆசி வழங்கினர். இந்தியப் பாரம்பரிய முறைப்படி பூங்காவுக்கு அருகில் உள்ள அரங்கத்தில் நடந்த திருமணம் நேரடியாகப் பெரிய திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது. திருமணம் முடிந்த பின்னர் மணமக்கள் அந்த பூங்காவை வலம் வந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

உணவு உட்பட அனைத்தும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று சப்ளை செய்யப்பட்டது. ஏதாவது பொருள் தேவைப்பட்டால் காரின் ஹெட்லைட்டையோ, இண்டிகேட்டரையோ ஆன் செய்தால் போதும், உடனடியாக இவன்ட் மேனேஜ்மென்ட் ஆட்கள் அந்த காருக்கு சென்று தேவையான உதவிகளைச் செய்வார்கள். இப்படி அந்த திருமணம் ஒரு வித்தியாசமான 'டிரைவ் இன்' திருமணமாக நடந்தது. மிகவும் சிந்தித்துத் தான் இந்த வித்தியாசமான திருமணத்தை நடத்தத் தீர்மானித்ததாக இவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தினர் கூறினர்.15 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள முடியும் என்றாலும், 200க்கும் மேற்பட்டோரைக் கலந்து வைத்துக் கலந்து கொள்ள வைத்த மகிழ்ச்சி மணமக்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது.

You'r reading 15 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்... ஆனால் வந்தது 200 பேருக்கும் மேல் சமாளித்தது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை