ஜோ பிடன் வென்றால் சீனா வென்றதாகி விடும்.. டிரம்ப் பிரச்சாரம்..

by எஸ். எம். கணபதி, Oct 16, 2020, 10:43 AM IST

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தற்போது இருவரும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். வடக்கு கரோலினா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்தான். தேர்தலில் அவரை நான் சந்திக்க வேண்டியுள்ளது. நான் வெற்றியை இழந்தால் அது மிகவும் கவலையான விஷயம்தான். ஆனால், இப்படியொரு மோசமான வேட்பாளரிடம் யார் தோற்க முடியும்? எனவே, எனக்குக் கவலை இல்லை.
நான் அறிவார்ந்த மக்களுக்குத் தலைமை தாங்கி வருகிறேன். மக்களின் தேர்வு எளிதான ஒன்று. ஜே பிடன் வெற்றி பெற்றால், அது சீனா வெற்றி பெற்றதாகி விடும்.

நான் வெற்றி பெற்றால் அது வடக்கு கரோலினா வெற்றி, அமெரிக்காவின் வெற்றி.
ஜோ பிடன் ஊழல் அரசியல்வாதி. அவரது மகன் ஹன்டர், சீன தொழிலதிபருடன் 10 மில்லியன் டாலர் அளவுக்கு ஒப்பந்தம் வைத்திருக்கிறார். ஜோ பிடன் வெற்றி பெற்றால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைச் சீனா திருடிக் கொள்ளும். ஜோ பிடனை மக்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும்.

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

Get your business listed on our directory >>More World News