விசாகப்பட்டினத்தில் 24 வது மலபார் கடற்படை பயிற்சி தொடங்கியது. இந்த கூட்டுப் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பங்கேற்றுள்ளன. 24 வது மலபார் கடற்படை பயிற்சி 2020 ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இரண்டு பகுதிகளாக நடைபெற உள்ளது. இதன் முதல் பகுதி நவம்பர் 3 முதல் 6 வரை விசாகப்பட்டினத்திற்கு அருகே வங்காள விரிகுடாவில் நடைபெறுகிறது.
1992 ம் ஆண்டு இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையே இரு தரப்பு பயிற்சி நடவடிக்கை தொடங்கப்பட்டது.2015 ம் ஆண்டு ஜப்பான் கடற்படை இதில் இணைந்தது. இந்த வருடம் முதல் ஆஸ்திரேலியா கடற்படையும் இதில் தன்னை இணைத்து கொண்டது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நேரடி தொடர்பில்லாத கடலில் மட்டுமே நடைபெறும் பயிற்சியாக இந்த முறை மலபாரில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் கடற்படையில் உள்ள நவீன கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் பங்குபெறும். இந்த பயிற்சியின் இரண்டாவது பகுதி இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அரபிக் கடலில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.