கொரோனாவை கட்டுப்படுத்துவது முதல் பணி.. ஜோ பைடன் பேச்சு..

by எஸ். எம். கணபதி, Nov 7, 2020, 12:54 PM IST

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி, 4வது நாளாக நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாகப் பல லட்சம் மக்கள் மெயில் ஓட்டு எனப்படும் தபால் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். அவற்றை எண்ணுவதில்தான் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவேடா, மிக்சிகன், அரிசோனா ஆகிய முக்கிய மாநிலங்களில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார். தற்போது பென்சில்வேனியா, ஜார்ஜியா மாநிலங்களிலும் ஜோ பைடன் முன்னிலையில் உள்ளதால், அவர் அதிபராவது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, 5 மாநிலங்களில் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் வழக்குத் தொடுத்துள்ளனர். மேலும், ஜோ பைடன் வெற்றியை டிரம்ப் ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஜோ பைடன் வெற்றி பெற்றதாக இப்போதே கோர முடியாது. சட்டப் போராட்டங்கள் முடியும் வரை நானும் அப்படிக் கோர முடியும் என்று அவர் பதிவிட்டார்.

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் உள்ளதாகக் கூறி, டிரம்ப் ஆதரவாளர்களும், வெற்றியைத் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்று ஜோ பைடன் ஆதரவாளர்களும் பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜோ பைடன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றி பேசியதாவது:இந்த பந்தயத்தில் நாம் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. நாம் எலக்டோரல் வாக்குகளில் 300ஐ தாண்டி அறுதிப் பெரும்பான்மை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அரிசோனாவில் வென்றுள்ளோம். நவேடாவில் இரண்டு மடங்கு வெற்றியை ஈட்டியுள்ளோம்.அரிசோனாவை 24 ஆண்டுகளுக்கு பிறகும், ஜார்ஜியாவை 28 ஆண்டுகளுக்குப் பிறகும் நமது ஜனநாயகக் கட்சி வென்றிருக்கிறது. இந்த நாடு நம் பின்னால் இருக்கிறது. நாம் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல. எதிர்க்கட்சியினர்தான்.

நான் அதிபரானதும் முதல் நாளில் இருந்து, கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தான் நமது வேலையாகும். கொரோனா வைரஸ் நோய்க்கு 2 லட்சத்து 43 ஆயிரம் அமெரிக்கர்கள் பலியாகியுள்ளனர். தினமும் கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்துவதே முதல் பணியாகும்.
இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.

You'r reading கொரோனாவை கட்டுப்படுத்துவது முதல் பணி.. ஜோ பைடன் பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை