வன்புணர்வு குற்றவாளிகளை பிடிக்க மகளை பணயம் வைத்த சப்-இன்ஸ்பெக்டர்

by SAM ASIR, Nov 14, 2020, 17:01 PM IST

பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளை பிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் சொந்த மகளை பணயமாக அனுப்பியுள்ளார். இச்சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்துள்ளது.

சிந்து மாகாணத்தின் காஷ்மோர் என்ற பகுதியில் வேலை தருவதாக கூறி பெண் ஒருவரை குற்றவாளிகள் அழைத்துள்ளனர். தன்னுடைய ஐந்து வயது மகளுடன் வந்த அப்பெண்ணையும் மகளையும் அவர்கள் நாள்கணக்கில் வன்புணர்வு செய்துள்ளனர். பிறகு வேறு ஓரிடத்திற்குக் கொண்டு சென்று அங்கும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னொரு பெண்ணை அழைத்து வந்தால் இவர்களை விடுவிப்பதாக கூறிய குற்றவாளிகள், ஐந்து வயது மகளை பணயமாக வைத்துக்கொண்டு தாயை மட்டும் அனுப்பியுள்ளனர். வேறொரு பெண்ணை அழைத்து வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அனுப்பப்பட்ட தாய், அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்தக் காவல் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர் முகமது பக்ஸ் புரிரோ, குற்றவாளிகளை பிடிப்பதற்காக தம்முடைய சொந்த மகளையே அப்பெண்ணுடன் அனுப்ப துணிந்துள்ளார்.

பாலியல் வக்கிரம் பிடித்த குற்றவாளிகளை சந்திக்க அப்பெண், சப்-இன்ஸ்பெக்டரின் மகளுடன் சென்றுள்ளார். அவரை அப்பகுதியிலுள்ள பூங்கா ஒன்றிற்கு வருமாறு குற்றவாளிகள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் ஐந்து வயது மகளை ஒப்படைத்ததும், சப்-இன்ஸ்பெக்டரின் மகள் குற்றவாளிகளின் பிடிக்குள் சென்றாள். அச்சமயம் சுற்றி வளைத்த போலீஸ், ரஃபீக் மலாக் என்பவனை கைது செய்து, சப்-இன்ஸ்பெக்டரின் மகளை மீட்டது.

அக்குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை அடையாளம் காட்டும்படி போலீஸ் ரஃபீக் மாலிக்கை அழைத்துச் சென்றது. கைருல்லா பக்டி என்பவனை கைது செய்ய சென்றபோது, அவன் போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். பக்டி சுட்டதில் ரஃபீக் வீழ்ந்தான். பக்டியை பிடித்த பாகிஸ்தான் போலீஸ், துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளது.

மகளை பணயமாக வைத்த சப்-இன்ஸ்பெக்டர் முகமது பக்ஸ் புரிரோவை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தைரியமாக செயல்பட்டதற்காக அவரது மகளும் பாராட்டப்படுகிறார். இருவர் பெயரும் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைக்கு உள்ளான தாயும் மகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வயது சிறுமிக்கு தேவைப்பட்டால் உலகின் எந்தப் பகுதியிலும் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாகவும், அவரது படிப்பு செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் சிந்து மாகாண அரசு அறிவித்துள்ளது.

More World News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை