உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற போதிலும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் சுற்றுப்பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பீதி இன்னும் குறையாத நிலையில், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது மேலும் பீதியை அதிகரித்துள்ளது. தற்போதுள்ள கொரோனா வைரசை விட இந்த புதிய வகை வைரஸ் 70 சதவீதம் வேகத்தில் பரவுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் முழு லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தை இந்தியா, பின்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்பட பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகள் மூலம் இந்தியாவிலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இங்கிலாந்திலிருந்து கேரளா வந்த 6 பேருக்கு நேற்று இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கேரளாவிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில வாரங்களாக இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா வைரசின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரசும் பரவுவது இந்த மாநிலத்தில் பீதியை அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார்.
குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கு கடந்த மாதமே போரிஸ் ஜான்சன் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்தியா வருவதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகையின் போது இரு நாடுகளிடையே பல வர்த்தக உடன்பாடுகள் கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருவது சந்தேகமே என தகவல்கள் வெளியாயின. ஆனால் போரிஸ் ஜான்சனின் வருகையில் எந்த மாற்றமும் இல்லை என்று இங்கிலாந்து தூதர் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வார் என்று இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.