அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், நாட்டின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக அமெரிக்க வாழ் இந்தியர் சமீரா பசிலியை நியமித்துள்ளார். தேசிய பொருளாதார கவுன்சில், பொருளாதார கொள்கை உருவாக்கும் செயல்முறையை ஒருங்கிணைக்கிறது மற்றும் அமெரிக்க அதிபருக்கு பொருளாதார கொள்கை ஆலோசனைகளை வழங்குகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி பதவியேற்கவுள்ள ஜோ பைடன் பல்வேறு பதவிகளுக்கு பலரை நியமித்து வருகிறார். குறிப்பாக, அமெரிக்கா வாழ் இந்தியர் அதிகளவும் நியமனம் செய்யப்பட்டு வரும் செய்திகள் அவப்போது தெரிய வருகிறது.
இந்நிலையில், ஒபாமா-பைடன் நிர்வாகத்தில், வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சிலின் மூத்த கொள்கை ஆலோசகராகவும், உள்நாட்டு நிதி மற்றும் சர்வதேச விவகாரங்களில் அமெரிக்க கருவூலத் துறையின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றிய பசிலியை ஜோ பைடன் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக நியமனம் செய்துள்ளார். முன்னதாக அட்லாண்டாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் பசிலி பணியாற்றி வந்தார். மேலும், சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டத்தின் இயக்குநராக பணியாற்றினார். பைடன் நிர்வாகத்தில் ஒரு முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது காஷ்மீரி வம்சாவளி இந்திய-அமெரிக்கர் பசிலி ஆவார். ஏற்கனவே டிஜிட்டல் வியூகத்தின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் பங்குதாரர் மேலாளராக ஆயிஷா ஷா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.